Published On: Thursday, January 21, 2016
மாணவர் சமூகம் உடற்பயிற்சி அற்ற ஒரு சமூகமாக மாறிக்கொண்டு வருகின்றனர்- மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்.
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரம் மற்றும் விஷேட தினம் 2016 ஜனவரி 25 தொடக்கம் 30 வரையிலான காலம் வரை நாடுமுழுவதும் அனுஷ்டிக்கப்படவுள்ளது, இந்நிகழ்வை காத்தான்குடி பிரதேசத்தில் சிறப்புற நடாத்துவதற்கான ஒரு கலந்துரையாடல் நிகழ்வொன்று பிரதேச செயலாளர் SH. முசம்மில் (SLAS) அவர்களின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (19.01.2016) அன்று காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் அல்ஹாஜ் ஷிப்லி பாறூக் அவர்கள், காத்தான்குடி நகரசபை செயலாளர், ஜம்மியத்துல் உலமா தலைவர், சம்மேளன பிரதிநிதிகள், இளைஞர் கழக உறுப்பினர்கள், இராணுவ, பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பல சமூக அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் அல்ஹாஜ் ஷிப்லி பாறூக் கலந்து சிறப்பித்து கருத்து தெரிவிக்கும் போது. அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனைக்கமைவாக இவ்வாறான நல்லதோர் செயல்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பது வெறுமனே ஒரு வாரத்தில் மாத்திரம் செயல்படுத்திவிட்டு அதனை விட்டுவிடுவதற்காக அல்லஇ தொடர்ச்சியாக ஒரு ஆரோக்கியமிக்க சமூகத்தினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தினாலாகும்.
இலங்கையில் அதிகளவிலான மக்கள் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் அன்மையில் கிடைத்த ஆய்வுகளின்படி 10 நபர்களில் 4 நபர்கள் இந்த நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற ஓர் கவலையான நிலைமை எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது, அது மட்டுமன்றி இலங்கையில் இலவசமாக கிடைக்கின்ற வைத்திய சிகிச்சை மூலம் இந்நோய்க்கான சிகிச்சையினை பெற்றுக்கொள்கின்றார்கள், இதனால் சுகாதாரதுறைக்காக ஒரு பாரியளவிலான நிதி இலங்கை அரசினால் செலவிடப்படுன்றது.
எனவே ஒரு நோய் எமக்கு வருவதற்கு முன் அந்நோய் ஏற்படாமல் இருப்பதற்காக தற்பாதுகாப்பினை மேற்கொள்வது மிகவும் சிறந்ததாக அமையும். இன்றைய நிலையில் காத்தான்குடி பிரதேசத்தில் வாழும் அனேகமாவர்கள் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதனை நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது, அதற்கு மிக முக்கியமான காரணம் போதியளவு உடற்பயிற்சி இன்மையும், சரியானதோர் கட்டுக்கோப்பான உணவு பழக்கவழக்கம் இன்மையுமாகும். அந்த வகையில் பிரதேச செயலாளர் தனக்கு கிடைத்த முன்மொழிவின் பிரகாரம் இன்று அதற்கான ஆரம்ப படியாக அதனை 1 வாரத்திற்குள் செயற்படுத்துவதற்காக வடிவமைத்து கொடுத்திருக்கின்றார்.
ஆனால் இதனை தொடர்ச்சியாக இங்கிருக்கும் இளைஞர் கழகங்கள், சமூக அமைப்புக்கள், ஜம்மியத்துல் உலமா மற்றும் சம்மேளனம், பொலிஸ், இராணுவ அதிகாரிகள், மற்றும் அனைவரும் தொடர்ச்சியாக ஆரோக்கியத்தினை பேணுவதற்குரிய எந்த விடயங்களை முன்கொண்டு செல்ல முடியும் என்பதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் இது எனது தாழ்வான வேண்டுகோள் என்று தனது கருத்தினை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் குறிப்பாக பாடசாலைகளில் கல்விகற்கும் பிள்ளைகளுடைய பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் வரவேண்டும், இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகளுக்கு விளையாடுவதற்கு நேரம் கிடைப்பது என்பது மிகவும் குறைவு ஏனென்றால் பாடசாலைவிட்டு வந்தவுடன், மார்க்க கல்வி கற்பதற்கா சென்று வருகின்றனர், அதன் பின் பிரத்தியேக வகுப்பிற்கு சென்று வீடு வரும்போது இரவு நேரமாகி விடுகின்றது அதன் பின் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டு விட்டு சிறிது நேரம் வீட்டில் இருந்து படித்து விட்டு தூங்க செல்கின்றனர், பின்னர் அதிகாலையில் எழுந்து மீண்டும் பாடசாலைக்கு செல்கின்றனர், அவர்கள் எடுத்துச் செல்லும் பாடசாலை பையினை பார்க்கும் பொழுது அதனை மிகவும் கஷ்டப்பட்டு சுமந்து செல்கின்றனர் அதற்காக வேறு ஒரு வாகனம் தேவை என தோன்றுகின்றது. பெற்றோர்கள் தமது பிள்ளைகள் வகுப்பில் 1ம் நிலையை அடைய வேண்டும், புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்ற போட்டித்தன்மை காரணமாக பிள்ளைகளை அவர்களுடைய சக்திக்கு அதிகமாக செயற்பட வைக்கின்றனர், அதனால் பிள்ளைகள் உடற்பயிற்சி அற்ற ஒரு சமூகமாக மாறிக்கொண்டு வருகின்றனர்.
சாதாரணமாக தற்போது 30 வயதினை கடந்த ஒருவரிடம் கேட்டால் இரத்த அழுத்தம், நீரழிவு நோய், மூட்டுவழி உபாதை போன்ற பல நோய்கள் இருக்கின்றது என்கின்றார், இக் காலகட்டத்திற்கு முன் வாழ்ந்த எமது மூதாதையர்களை கேட்டால் 50, 60 வயது வரும் வரை அவர்களுக்கு இவ்வாறான நோய்கள் ஏற்பட்டதில்லை என்கின்றார்கள் அதற்கு காரணம் என்னவென்றால் அவர்களுடைய உணவு பழக்க வழக்கங்கள், வாழ்கையினுடைய பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி செயற்பாடுகள் சிறந்தமுறையில் இருந்ததனால் அவர்களுடைய ஆரோக்கியம் நல்லமுறையில் பேணப்பட்டது. ஆகவே அவ்வாறானன ஓர் சமூகத்தினை நாம் உருவாக்க வேண்டும்.
இதற்காக வேண்டி இங்குள்ள இளைஞர் கழகங்கள், சமூக அமைப்புக்கள், பாடசாலை குழுக்கள், சமுர்த்தி குழுக்கள் இவ்வாறான பல குழுக்களை ஒன்றினைத்து ஒரு கண்காணிப்பு குழுவொன்றினை நியமித்து, இதனை மேன்படுத்த எவ்விதமான நடவடிக்கையினை மேற்கோள்ள வேண்டும் என்ற விடயத்தினை கருத்திற்கொண்டு இந்த செயற்பாட்டினை ஒரு வாரம் மாத்திரம் செயல்படுத்திவிட்டு விட்டுவிடாமல் குறைந்த பட்சம் 10 வீதமாவது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுமாக இருந்தால் ஒரு பாரியளவிலான மாற்றத்தினை காணலாம். அதற்கான உரிய நடவடிக்கைகளை பிரதேச செயலாளர் மேற்கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டார்.
அத்துடன் பிரதேச செயலாளர் அவர்கள் காத்தான்குடி பொது மைதானத்தினை
விளையாட்டுத்துறை திணைக்களத்திலிருந்து சட்டபூர்வமாக விடுவித்து அதனை காத்தான்குடி நகரசபைக்கு கையளிக்க வேண்டும், மேலும் இப் பொது மைதானத்தின் இரு பக்கங்களும் மக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்துகின்ற ஒரு அவல நிலைமை காணப்படுகின்றது, எனவே அதனை தடுத்து மைதானத்தினை சீர்செய்து பிள்ளைகள் விளையாடுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காத்தான்குடி நகரசபை செயலாளர் திரு. சர்வேஸ்வரன் அவர்களை கேட்டுக் கொள்கின்றேன் என்று தனதுரையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் அல்ஹாஜ் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
(ஜுனைட்.எம்.பஹ்த்)