Published On: Friday, January 08, 2016
தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி
தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்தகவலை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வருகின்றனர். மத்திய அமைச்சரவையின் ஒட்டுமொத்த முடிவையொட்டி ஜல்லிக்கட்டை மீண்டும் அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசு அறிவிக்கை (Notification) வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என அனுமதி வழங்கி நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த ஒரு விவகாரத்துக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஜல்லிக்கட்டு அனுமதி தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டரில், "ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. தமிழர்களின் கலாச்சார விளையாட்டிற்கு அனுமதி வழங்கி பெருமை சேர்த்த பிரதமர் @narendramodi, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் @PrakashJavdekar, குரல் கொடுத்த அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பாக எனது நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தனியார் தொலைக்காட்சிகளுக்கு அவர் அளித்த பேட்டியில், "ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டை நடத்த தயாராகுமாறு மத்திய அமைச்சர் ஜவடேகர் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்" என்றார்.
தலைவர்கள் வலியுறுத்தல்:இத்தகைய சூழலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசிடம் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
தமிழிசை வரவேற்பு:ஜல்லிக்கட்டு அனுமதி குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, "தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்துள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
தடையின் பின்னணி:தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த, கடந்த 2014-ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து 19.05.2014 அன்று தமிழக அரசு மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது.இந்நிலையில், காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி சட்டம் இயற்றினால், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்பதால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்தது.இதற்கிடையில், கடந்த 2015 டிசம்பர் 23 தேதியுடன் முடிவடைந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு ஏதும் நடைபெறவில்லை.
