Published On: Friday, January 15, 2016
கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தியை மீண்டும் தொடங்க அணுஉலையில் நீராவி வெளியேற்றும் சோதனை
கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக இன்னும் ஓரிரு நாட்களில் நீராவி வெளியேற்றும் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள இந்த அணு உலையில் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. கடந்த 7 மாதங்களாக அணு சக்தி ஒழுங்கமைப்பு வாரிய அதிகாரிகளின் ஒப்புதலுடன் அணு உலையில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பராமரிப்பு பணிகளும் செய்யப்பட்டன. தற்போது இந்த அணுஉலை மின் உற்பத்திக்கு தயாரான நிலையில் உள்ளது.
இந்நிலையில் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கூடங்குளம் முதலாவது அணு உலையில் முதற்கட்டமாக 687.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு ரூ.1,565 கோடி வருமானம் ஈட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 2-ம் கட்டமாக இந்த அணுஉலையில் மின்உற்பத் தியை தொடங்க ஏதுவாக எரிகோல்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து, மின் உற்பத்திக்கு தயாராக இருக்கிறது.மின்உற்பத்தியை தொடங்குவதற்கு முன்னதாக அணு உலையில் இருந்து நீராவியை வெளியேற்றும் சோதனை நடத்தப்படவுள்ளது இச்சோதனையின் போது சேப்டி வால்வுகள் திறக்கப்பட்டு வளிமண்டலத்தில் நீராவி வெளியேற்றப்படும் நேரத்தில் அதிக சத்தம் எழும்பும். இதுகுறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. இச்சோதனை பகல் நேரத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படும்’ என்றார் அவர்.
