Published On: Monday, February 08, 2016
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஈன்றெடுத்த பிள்ளைக்கு பதிவு வைக்கும் நடவடிக்கைகளில் புதிய அரசாங்க காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈடுபட்டு வருகிறது
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஈன்றெடுத்த பிள்ளைக்கு பதிவு வைக்கும் நடவடிக்கைகளில் புதிய அரசாங்க காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈடுபட்டு வருகிறது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கிரான் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான தொழிநுட்ப பீட கட்டடம் மற்றும் ஆய்வு கூட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்!
புதிய அரசாங்கம் இதுவரை கல்வியில் பாரிய திட்டங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினருக்கு பாதகமான செயல் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கல்வி ரீதியான பல செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் 1000 பாடசாலை அபிவிருத்தித் திட்டம் தொழில்நுட்ப பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில்நுட்ப பிரிவு பாடசாலை தெரிவில் தமிழ் பாடசாலைகள் குறைக்கப்பட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு தொழில் நுட்ப பாடசாலை தெரிவில் மிக ஆர்வமாகச் செயற்பட்டது. நாங்கள் எந்த பாடசாலையையும் மாற்றவில்லை புதிய பாடசாலைகளை மேலதிக இணைத்தோம் அந்த சந்தர்ப்பத்தில் இந்த பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதன் கிரான் மகா வித்தியாலயத்தை இந்த திட்டத்தில் இணைப்பதற்காக முன்மொழிந்தார்.
தற்போது நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொள்ளும் புதிய அரசு கல்வி மற்றும் அபிவிருத்தி ரீதியாக எந்தவித முன்னேற்றகரமான செயற்பாடுகளும் இதுவரை முன்னெடுக்கவில்லை. ஆட்சி மாற்றத்துக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பு பின்பற்றி வந்த கொள்கைகளுக்கு அப்பால் நல்லெண்ண அடிப்படையில் பிரசாரங்களில் ஈடுபட்டது. ஆனால் இந்த அரசாங்கம் எமது பகுதிகளில் எவ்வித அபிவிருத்தியையும் மேற்கொள்ளவில்லை.
கிழக்கு மாகாணத்தில் நாங்கள் கல்வி அமைச்சு உட்பட இரு அமைச்சுக்ளைப் பெற்றுள்ளளோம் இந்த அமைச்சுக்கள் தொடர்பாக நான் பேச விரும்பவில்லை. நாளை மக்கள் எங்களைப் பார்த்து கேள்வி கேட்கக் கூடாது. எமது பிரதேசங்கள் கல்வி ரீதியாக முன்னேற்றமடைய வேண்டும் அதற்கு கல்வி இராஜாங்க அமைச்சராகிய உங்களது பூரண ஒத்துழைப்பு எமது மாவட்டத்துக்கு தேவையாகவுள்ளது” என்றார்.
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்