Published On: Monday, February 08, 2016
வவுனியா மாவட்ட விளையாட்டுத்துறை அபிவிருத்தி மற்றும் மைதான அபிவிருத்திகள் தொடர்பில் பிரதி அமைச்சர் ஹரீஸ் நேரில் சென்று ஆய்வு
வட மாகாணத்தின் விளையாட்டுத்துறை அபிவிருத்தி மற்றும் மைதான அபிவிருத்திகள் தொடர்பில் ஆராய்வதற்கு வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரி குழுவினர்; கடந்த வெள்ளி (05), சனி (06) இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
வவுனியா மாவட்டத்தின் விளையாட்டுத்துறை அபிவிருத்தி மற்றும் மைதான அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் மாநாடு வவுனிய பிரதேச செயலாளர் கே.உதயராஜாவின் ஏற்பாட்டில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்றது.
இம்மாநாட்டில் தமிழத் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கே.காதர் மஸ்தான், வட மாகாண கல்வி, கலாச்சார, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பீ.குருகுல ராஜா, முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முத்தலிபா பாறூக், வட மாகாண சபை உறுப்பினர் எம்.எச்.றயீஸ், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ரீ.எம்.ஆர்.டி. திஸாநாயக்கா, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.அப்துல் ஹை, இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.எம்.மிஸ்பர் உள்ளிட்ட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்டத்தின் விளையாட்டு வீரர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், விளையாட்டு மைதானத்தின் குறைபாடுகள், விளையாட்டு கழகங்களின் வலுப்படுத்தல் பற்றி இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வவுனியா தெற்கு வலய பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள், பாடசாலைகளின் மைதான அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல்; வவுனியா பட்டனிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.றம்சீன் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டதுடன் பாடசாலை விளையாட்டு மைதானத்தின் குறைபாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
வவுனியா நகர சபை விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி தொடர்பில் பிரதி அமைச்சர் பார்வையிட்டதுடன் இம்மைதான அபிவிருத்திக்கான மதிப்பீட்டு அறிக்கைகளை உடன் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதனை அடுத்து நகர சபை உடல் வலுவூட்டல் நிலையத்தை பார்வையிட்ட பிரதி அமைச்சர், அங்கு நிலவுகின்ற குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் உடல் வலுவூட்டல் நிலையத்திற்கான புதிய பயிற்சி உபகரணங்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
வவுனியா வைரவபுளியங்குளம் யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் மைதானத்தினை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்; பார்வையிட்டார்.
இம்மைதானத்தின் குறைபாடுகளை பிரதி அமைச்சர் யங் ஸ்டார் விளையாட்டுக்கழக தலைவர் வீ.ராஜ்குமார் உள்ளிட்ட கழக பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து கொண்டதுடன் மைதானத்தினை அபிவிருத்தி செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர்,
கடந்த 30 வருட கால யுத்தத்தினால் நலிவடைந்து போன வடக்கு, கிழக்கு மாகாண விளையாட்டுத்துறையினை கட்டியெழுப்புவதற்கான முழு நடவடிக்கையினையும் மேற்கொள்ளவுள்ளேன். இம்முயற்சிக்கு வட, கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ் அழைப்பு விடுத்தார்.
(ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்)



