Published On: Friday, March 11, 2016
விஜயகாந்த் அறிவிப்பால் திமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை மு.க.ஸ்டாலின் பேட்டி
தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக தேமுதிக அறிவித்துள்ளது அக்கட்சியின் உரிமை. அவர்கள் உரிமையில் தலையிட நாங்கள் விரும்பவில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கருத்து தெரிவித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் அறிவிப்பால் திமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. தேமுதிகவின் உரிமையில் தலையிட விரும்பவில்லை. அழைப்பை ஏற்பதும், மறுப்பதும் அவர்களது உரிமை என்றார். முன்னதாக சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி இல்லத்தில் திமுக மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிகவின் தனித்துப் போட்டி அறிவிப்பு, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
முன்னதாக, தேமுதிக உடனான கூட்டணி முயற்சி குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறும்போது, "பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை. கூட்டணி முடிவாவததில் இழுபறி எதுவும் கிடையாது. திமுக கூட்டணியில் தேமுதிக சேரும் என்ற நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது" என்றது நினைவுகூரத்தக்கது.