Published On: Sunday, April 24, 2016
ஏறாவூர் நகரசபையிள் பிரசே அபிவிருத்திக் குழுக் கூட்டம்
ஏறாவூர் நகரசபையில் தேவைக்கு அதிகமாக ஆட்சேர்ப்புச் செய்து சபையின் நிதி வீண்விரயம் செய்யப்படுவது தொடர்பாக பிரசே அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஏறாவூர் நகர சபையின் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் நூறு பேர் போதுமானதாகவுள்ள போதிலும் அண்மைக்காலத்தில் மேலதிகமாக நூறு பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் பிரதிநிதிகள் விசனம் தெரிவித்தனர்.
ஏறாவூர் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மொலானா ஆகியோரின் இணைத் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை ஏறாவூர் நகர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.சுபைர், சிப்லி பாறூக், பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, அரசாங்க, அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
ஏறாவூர்ப் பிரதேசத்தில் மக்கள் நலப் பணிகளை முன்னெடுப்பதில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் இங்கு ஆராயப்பட்டன.
இதன்போது ஏறாவூர் நகர சபையின் நடவடிக்கைள் குறித்து பல தரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஏறாவூர் உள்ளுராட்சி மன்றம் அண்மையில் நகர சபையாக தரமுயர்த்தப்பட்டது. அவ்வேளை அதிகாரத்திலிருந்த அரசியல் சார்ந்தவர்கள் தேவையான ஆளணியை நியமித்துவிட்டு பல மில்லியன் ரூபா நிதியினை சபையின் இருப்பாக விட்டுச்சென்றனர்.
ஆனால் அண்மைக்காலத்தில் தேவைக்கு அதிகமாக ஆட்சேர்ப்புச் செய்து சபையின் இருப்பு நிதியிலிருந்து கொடுப்பனவுகள் வழங்கப்படுவதனால் கையிருப்பு நிதி தீர்ந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. ஊழியர்களுக்கு இம்மாதக்கொடுப்பனவாக தலா பத்தாயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் தேவைக்கு அதிகமான ஆட்சேர்ப்புச் செய்வதன் மூலம் இருப்பிலிருந்த மக்களின் வரிப்பணத்தை கொடுப்பனவு வழங்கி வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
செயலாளர் சுய விருப்பின் பேரிலோ அல்லது அரசியல்வாதிகளது அழுத்தம் காரணமாகவோ இந்த நடவடிக்கை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் விசாரணைக்கென அழைக்கும்போது செயலாளரே பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்படும். எமது மக்களின் வரிப்பணத்தை இவ்வாறு வீண்விரயம் செய்ய முடியாது. இந்த விடயம் மக்களுக்கு தெரிந்தால் நகரசபைக்கு வரி செலுத்துவதற்குத் தயக்கம் காட்டுவார்கள்: எதிராக கிளர்ந்தெழுவார்கள்.
உதாரணமாக வாசிகசாலைகளை எடுத்துக்கொண்டால் அங்கு வரும் வாசகர்களைவிட ஊழியர்களே அதிகம் காணப்படுகின்றமை விகடத்திற்குரியது.
மேலும் ஏறாவூர் பிரதேசத்தில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வீதி விஸ்தரிப்பு வேலைகளையடுத்து 37 இடங்களில் நடைப்பாதையிலுள்ள மின் கம்பங்களை இடமாற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும் நகர சபை அவ்வேலைகளை இதுவரை முன்னெடுக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது.
ஏறாவூரில் எதிர்காலத்தில் வெள்ளம் போன்ற தீடீர் அனர்த்தம் ஏற்பட்டால் மக்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளைக்கூட மேற்கொள்வதற்கு நிதி இல்லாமலிருப்பது துரதிஷ்டவசமானது.
(ஏறாவூர் நிருபர்-ஏஎம் றிகாஸ்)