Published On: Friday, April 08, 2016
நவீன கற்கை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையின் உயர்தர வகுப்பு மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு நவீன கற்கை நிலையம் ஒன்று சிவானந்தாவின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணரும் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான கே.ரி.சுந்தரேசன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
சிவானந்தா தேசியப்பாடசாலையின் முன்னை நாள் மாணவர்களின் முயற்சியிலும் அனுசரணை, நிதியிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன கற்கை நிலையத்தினை மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசனின் தலைவர் சிறிமத் சுவாமி பிரபு பிரேமானந்தாஜீ மகாராஜ் திறந்து வைத்தார்.
அவருடன், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், அதிபர் கே.மோகன்ராஜ், ஆகியோர் ஆகியோரும் இணைந்திருந்தனர்.
இந்த நிகழ்வில், விசேட அதிதிகளாக, சிவானந்தா தேசியப் பாடசாலையின் முன்னைநாள் மாணவர்களான வைத்திய நிபுணர் வி.விவேகானந்தராஜா, முன்னாள் அரசாங்க அதிபர் சி.புண்ணியமூர்த்தி, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் என்.மோகனதாஸ், பொறியியலாளர் என்.சிறிஸ்கந்தராஜா, வைத்திய நிபுணர் எம்.அகிலன், வைத்திய நிபுணர் என்.தமிழ்வண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
உயர்தர வகுப்பு மாணவர்களை மேம்படுத்தி அவர்களைப் பரீட்சைகளுக்குத் தயார் படுத்தும் வகையில் இந்த நவீன கற்கைகளுக்கான நிலையம் ஏற்பட்டிருந்தாலும் ஏனைய மாணவர்கள், ஆசிரியர்களும் இந்த நிலையத்தினை பயன்படுத்தி தம்மை வளப்படுத்திக்கொள்ளவும் முடியும்.
இந்த நவீன கற்கை நிலையத்தில் இன்ரர்நெற் வசதியுடனான கணணிகள், புரொஜக்ரர் வசதிகள், கல்வி நூல்கள், பாடத்திட்ட நூல்கள், பயிற்சி உபகரணங்களுடன் தயார் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
15 லட்சம் செலவு மதிப்பீட்டில் அமையப் பெற்றுள்ள இந்த கற்கை நிலையத்தில் ஒவ்வொரு விடயம் தொடர்பிலும் வீடியோக்கள் மூலமான விளக்கங்களுடன் கற்பிக்கப்படுகின்றன.
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்