Published On: Friday, April 08, 2016
எதிரிகளை பலப்படுத்தும் ஹசனலியின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது – கல்முனை முதல்வர் நிசாம் காரியப்பர்
ஹசனலியின் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் கட்சியினை பலவீனப்படுத்தும் அவரின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் கட்சியின் மூத்த போராளியாக இருப்பினும் அவர் சொல்லுகின்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்கெதிராக கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உதவிச் செயலாளரும், கல்முனை மாநகர சபை முதல்வருமான சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கல்முனைத் தொகுதி மத்திய குழுக்களுக்கான கூட்டம் சாய்ந்தமருது சுகாதார மத்திய நிலையத்தில் சனிக்கிழமை (02) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு முதல்வர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
கட்சியின் செயலாளர் பதவியில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்ற உயர்பீட உறுப்பினர்களின் ஆலோசனை வழங்கியிருந்தனர். இந்த விடயம் கட்சியின் மூன்று உயர்பீட கூட்டங்களில் கலந்தாலோசிக்கப்பட்டதன் பின்னரே கண்டியில் நடைபெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டில் வைத்து அங்கீகாரம் வழங்கப்பட்டது. இவை அனைத்து கூட்டங்களிலும் செயலாளர் நாயகம் ஹசனலி கலந்து கொண்டிருந்தார். ஆனால் செயலாளர் பதவி மாற்றம் பற்றி அவர் அக்கூட்டங்களில் வாயே திறக்கவில்லை.
இன்று அவர் எதிர்பார்த்திருந்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கப் பெறாத நிலையில், கட்சிக்கு சவால் விடுத்து, கட்சியை பலவீனப்படுத்தி எதிரிகளை பலப்படுத்தும் அவரின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக ஹசனலி இருந்தாலும் அவருக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அனுமதியை சபை வழங்க வேண்டும்.
ஹசனலியை இணக்கத்திற்கு கொண்டு வருவதற்கு முற்பட்ட வேளை அவர் கூறும் விடயங்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது எனவும் முதல்வர் நிசாம் காரியப்பர் தெரிவித்ததார்.
(ஏ.சீ. உமர் அலி)
